Friday, August 26, 2011

தாய் தந்தையரின் முக்கியத்துவம்


“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)

தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக இருப்பதே!

நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-

“எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை,” அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்”

என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.

எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.

இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.

“தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்.” (62:10)

இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.

தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:

“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)

இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.

இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :

தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன். (29:8)

மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) புகாரீ)

மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்.

நோன்புப் பெருநாள் தர்மம்


புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை கடமையாக்கியுள்ளான்.

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு
உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கடமையாக்கினார்கள்.என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் அபூதாவுத்)

முஸ்லிமான அடிமைகள், அடிமை அல்லாதவர்கள் ஆண்கள், பெண்கள் அனைவர் மீதும் ஸகாதுல்
பித்ர் கடமையாகும். தனக்கும் தனது குடும்பத்தினருடைய தேவைக்கும் இருப்பதை விட ஒரு
ஸாவு மேலதிகமாக ஒரு முஸ்லிம் வைத்திருந்தால் அவரின் மீது ஸகாதுல் பித்ர் கடமையாகும்.

அடிமைகள்,அடிமைகள் அல்லாதவர்கள், ஆண்கள் பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து
முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் கடமையாக்கினார்கள்.
பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு “ஸாவு” எனவும் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள்
புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கி விட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் இப்னு உமர் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

உணவிலிருந்து அல்லது பேரீச்சம் பழம், கோதுமை பாலாடைக் கட்டி, போன்றவற்றிலிருந்து ஒரு
ஸாவு நோன்புப் பெருநாள் தர்மமாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கொடுத்து வந்தோம்.

இன்னுமொரு அறிவிப்பில் அன்றைய உணவு கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி,
பேரீச்சம் பழம் ஆகியவையாகும்.

மேற்குறிப்பிட்ட உணவு வகைகளில் சிறந்த பிரயோசனமுள்ள உணவுகளை ஏழை, எளியோர்க்கு
கொடுப்பது ஒரு முஸ்லிமின் கடமையாகும்.

நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மையடைய
மாட்டீர்கள். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை
நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அபீ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் கூறப்பட்ட உணவு வகைகள்
அல்லாமல் இன்று மக்கள் உணவாக கருதக் கூடிய அரிசி போன்றவற்றை ஸகாதுல் பித்ராக
கொடுத்தால் அது ஆகுமானது என சில மார்க்க அறிஞர்கள் இப்னு தைமியா, இப்னுல் கையும்
போன்றோர் கூறுகின்றனர்.

ஸகாதுல் பித்ர் விடயத்தில் “ஸாவு” என்பது நான்கு முத்துகளாகும். முத்து என்றால்
நடுத்தரமான ஒரு மனிதனின் இரண்டு கைகளை இணைத்து சிறந்த கோதுமை போன்றவைகளை நிறைத்து
எடுப்பதாகும்.

நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்க இரண்டு நேரங்கள் உள்ளன:

1- பெருநாள் இரவு சூரியன் மறைந்ததிலிருந்து ஆரம்பமாகின்றது. அதிலே மிகச் சிறந்தது
பஜ்ர் தொழுகைக்கும், பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம். இப்னு உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஸகாதுல் பித்ரை
கடமையாக்கினார்கள். மேலும் பெருநாள் தொழுகைக்கு மக்கள் செல்வதற்கு முன் அதை கொடுத்து
விடுமாறும் ஏவினார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் புகாரி)

2- அனுமதிக்கப்பட்ட நேரம்: இந்த நேரம் பெருநாள் தினத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு
நாட்களுக்கு முன்பாகும்.

ஸகாதுல் பித்ரை பெறத் தகுதியானவர்களுக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கொடுத்தார்கள்.
மேலும் பெருநாள் தினத்திற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பும்
கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன்பு யார் அதை வழங்கிவிடுகிறாரோ அது ஏற்றுக் கொள்ளப்பட்ட
தர்மமாகும். யார் அதை தொழுகைக்குப் பின் வழங்கிறாரோ அது பொதுவான ஸதகாவாகும். என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்
(ஆதாரம்:அபு தாவுத்)

பெருநாள் தொழுகை முடியும் வரை பிற்படுத்தினால் அது களாவாகும். அதாவது அதை மீண்டும்
திருப்பிக் கொடுக்க வேண்டும். நேரம் முடிந்து விட்டதனால் அந்தக் கடமை அவரை விட்டும்
நீங்கி விடாது. மேலும் பிற்படுத்தியதனால் அவர் பாவியாவார் என ஷைகுல் இஸ்லாம் இப்னு
தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ஏழை, எளியோர்க்கு இந்த தர்மம் கொடுக்கப்பட வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் இது ஏழைகளின் உணவு என
குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தர்மத்தை ஒரு ஜமாஅத்தினரிடமோ அல்லது
குடும்பத்தில் உள்ள அனைவருடைய பங்கையும் ஒரு ஏழைக்கு வழங்குவதோ
அனுமதிக்கப்பட்டுள்ளதாகும். தேவை ஏற்படின் ஒரு ஏழையின் பங்கை பிரித்து பலருக்கு
கொடுப்பதும் ஆகுமானதாகும்.

ஆனால் இந்த தர்மத்தை பணமாக கொடுப்பது ஆகுமானதல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பணம்
கொடுப்பதற்கு வசதி இருந்த போதும் உணவு வகைகளையே நபி (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். உணவின் பெறுமதியை கொடுப்பது ஆகுமானதாக இருந்தால் நபி (ஸல்)
அவர்கள் அதை தெளிவுபடுத்தியிருப்பார்கள். காரணம் சட்டங்களை தெளிவு படுத்துவது
அவர்களின் காலத்தில் அவசியமாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த
நபித்தோழர்கள் தன்னிடம் வசதி இருந்த போதும் எவரும் இந்த தர்மத்தை பணமாக கொடுத்ததாக
அறியப்படவில்லை. மேலும் பணத்தைக் கொடுப்பது கண்ணியமான இந்த அமலை மறைப்பதாகவும்,
இந்த சட்டங்களை மனிதர்கள் மறந்து போவதாகவும் ஆகிவிடுகிறது.

பெருநாள் தினத்தன்று எந்த ஊரில் இருக்கிறாரோ அங்குள்ள ஏழைகளுக்கு இந்த தர்மத்தை
வழங்க வேண்டும் என்பது அடிப்படையாகும். தர்மம் வழங்கக்கூடியவருடைய ஊரில் இருக்கும் ஏழைகளை விட மிகவும் கஷ்ட நிலையில் அடுத்த ஊரில் இருப்பின் அங்கு கொடுப்பது ஆகுமானதாகும்.


அஷ்ஷேக் அமீன் பின் அப்தல்லாஹ் அஷ்ஷகாவி
தமிழில்: மவ்லவி முஹம்மத் இம்ரான் கபூரி
(அபூ அப்துல் பாசித்)